பெண் உரிமை பற்றிய பெரியார் மொழிகள்…

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8)

பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7)

பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட, ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள், ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவிமுதல் சாவுவரை அடிமையாகவும் கொடுமையாகவுமே நடத்துகிறார்கள். (கு.8.2.31;12:2-1)

இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். (கு.28.4.35;5:1)

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே வளர்ச்சிபெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது. (கு.16.6.35;7:3)

பெண்களுக்குப் பகுத்தறிவுக் கல்வியும், உலக நடப்புக் கல்வியும், தாராளமாகக் கொடுத்து, மூட நம்பிக்கை, பயம் ஆகியவற்றை ஊட்டக்கூடிய கதைகளையோ, சாத்திரங்களையோ, இலக்கியங்களையோ காணவும் கேட்கவும் சிறிதும் இடமில்லாமல் செய்ய வேண்டும். (வி.22.3.43;4:2)

பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும் சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும். (பெ.சி.மி:170)

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது மொழிகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்குக் காரணம், ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை. (கு.8.1.28;6:3)

கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலையும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொடுமை ஒழிய வேண்டும். (கு.8.1.28;15:1)

பெண்ணுக்குச் சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம். அப்படியானால் மனிதன் தன் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா அது? (பெ.க.மு.தொ;134)

பெண்களுக்குத்தான் கற்பு: ஆண்களுக்கு வலியுறுத்தக் கூடாது என்கின்ற தத்துவமே தனி உடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது. ஏன் என்றால்,பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவளின் நிலைமை. (கு.1.3.36;11:3)

நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? (வி.1.6.68;3:5)

சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ”ஆண்மை”க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ”ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி. (கு.12.8.28;10:2)

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *